Wednesday, May 26, 2010

விரிசல்

மழைகொட்டுமோர்
நள்ளிரவில் இடிவிழுந்து
விரிசல் கண்டது  சுவர்..

மறுதினம் ஆளுகொருபுறம் நின்று
நூல்கோர்த்து பார்த்தோம்...

பிரிதொர்தினம் விரிசலிடை
விரல் கோர்த்துக்கொண்டோம்...
மற்றுமோர் சமயத்தில்
கைகுலுக்கிக்கொள்ள முடிந்தது...

சிலநாட்களாய்
உள்வரவும் வெளியேறவும்
ஏதுவையிருகிறது...

ஆனாலுமென்ன
பேரிடியின் முந்தயகணத்தின்
மின்னொளியில் பார்த்த
முழுச்சுவரை என்னசெய்தும்
ஞாபகத்திலிருந்து அகற்ற முடிவதேயில்லை...

Sunday, May 23, 2010

பிளாட்பாரம்

பிளாட்பார குளிரில் படுத்து
நடுங்கி கொண்டிருந்தவளை
பிளாட்பாரத்தில் படுத்து கொள்பவன்
கடக்கையில்
பரஸ்பர புன்னகைகள்
பரிமாறிக்கொள்ளப்பட்டது...
"எங்க போற?"
என்ற இவளின் தமிழ் கேள்விக்கு
அவன் ஹிந்தியில் பேசியது
பதிலாயும் இருந்திருக்கலாம்...
மொழிகளை கடந்த பரிமாற்றம்
அங்கு துவங்கிய வேளையில்
பசிக்கிறது என்றவளின்
குரலில் இருந்த பசியை அறிந்தவன்
தன் அழுக்கு மூட்டை திறந்து
யாரோ தந்த
ஒற்றை பார்சலை அவளிடம் வைத்தான்...
பிரிக்கும் போதே வெளிவந்தது
கெட்டுப் போன வாடை...
எந்தவித சலனமுமின்றி
அவன் எழுந்து நடந்தான்
அவள் படுத்துக்கொண்டாள்...
பாதி பிரிக்கப்பட்டு
காற்றில் பட படத்தது பார்சல்...

Saturday, May 22, 2010

மையம்

மையம்மாற்றி
வரையப்பட்ட
வட்டத்தில்
தனித்திருக்கிறது
நேற்றைய மையம்....

Friday, May 21, 2010

பின்னிரவு

எல்லோரும் ஆழ்ந்து உறங்கிய பின்னிரவில்
கவிழ்ந்த தன் தட்டை
பலம்கொண்டமட்டும்
விலக்கிதள்ளியும்
பின் இழுத்து அணைத்தும்
சத்தமெழுப்பிக்கொண்டிருந்தது நாய்…
நான் உன் நினைவுகளை...

Sunday, May 16, 2010

மழை

இதுவரை
உக்கிரமாய்
இருந்த கணங்களை
சொல்லிவிட்டுப்போனது
நேற்றிரவு
அடித்துப் பெய்த மழை...

Friday, May 14, 2010

இழப்பு

பெருமரத்தின்
முறிந்த கிளையொன்று
உறுத்தப்போவதில்லை
யாருடைய கண்களுக்கும்...
இழப்பறியும் மரம்...